ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று நடந்தது. ஏற்கனவே ஆஃப்கானிஸ்தான் அணி தொடரைக் கைப்பற்றியதால், ஆறுதல் வெற்றிக்காக அயர்லாந்து அணி போராடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி கேப்டன் பால்பிர்னி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணியில் கெவின் ஓ பிரையன் 26 ரன்களுக்கும், டெலானி 37 ரன்களுக்கும், டெக்டர் 31 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினார். இறுதியாக அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டிகள் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. ஆஃப்கானிஸ்தான் அணி சார்பாக குவாஸ் அஹ்மத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு குல்பாஸ் - உஸ்மான் இணை சிறப்பாக தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த நிலையில், குர்பாஸ் 42 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து. உஸ்மான் 18 ரன்களிலும், ஜனத் 17 ரன்களில் வெளியேறினர். கேப்டன் ஆஃப்கான் நிதானமாக ஒருமுனையில் ரன்களை சேர்த்தார்.
19 ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான் அணி 127 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெற 6 பந்துகளுக்கு 16 ரன்கள் எடுக்கவேண்டிய நிலை வந்தது.
கடைசி ஓவரின் 2ஆவது பந்தில் கேப்டன் ஆஃப்கான் 32 ரன்களில் ஆட்டமிழக்க, ரஷீத் கான் களமிறங்கி ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் 15 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. அதில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 ரன்களை சேர்த்தது.
9 ரன்கள் இலக்கை விரட்டிய அயர்லாந்து அணி, 5 பந்துகளில் 6 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் கடைசி பந்தில் கெவின் ஓ பிரையன் சிக்சர் விளாசி வெற்றியைப் பதிவு செய்தார். இந்த வெற்றியின் மூலம் 7 வருடங்களுக்கு பின் டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை அயர்லாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஃப்கானிஸ்தான் அணி தொடரைக் கைப்பற்றியது.
இதையும் படிங்க: ரஞ்சி டிராபி போட்டியில் நடுவருக்கு ஏற்பட்ட காயம்! - எதனால் தெரியுமா?