சீனாவுடன் ஏற்பட்ட எல்லைப் பிரச்சினைகளுக்குப் பிறகு சீனப் பொருட்களைத் தடை செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் பரவலாகக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதன் காரணமாக கடந்த மாதம் பல்வேறு முன்னணி சீனச் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கு சீனாவின் விவோ நிறுவனம் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்பாக இருந்ததால், அந்நிறுவனத்தையும் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு சீனாவின் விவோ நிறுவனத்தினுடைய ஸ்பான்ஸர்ஷிப் தடை செய்யப்படுவதாக நேற்று முன்தினம் பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்பிற்காக அமேசான், பைஜூஸ், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இது குறித்து சந்தை ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், ”இந்த ஆண்டு ஐபிஎல் தொடரானது தீபாவளிப் பண்டிகை சமயத்தில் நடத்தப்பட உள்ளதால் ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்பை வாங்குவதற்காக அமேசான் நிறுவனம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
அதே சமயம் இந்திய அணியின் ஸ்பான்ஸராக இருந்த பைஜூஸ் நிறுவனத்தின் ஒப்பந்தமும் இந்த ஆண்டோடு முடியவுள்ளதால், அந்நிறுவனத்தின் மொத்த கவனமும் தற்போது ஐபிஎல் தொடர் மீது திரும்பியுள்ளது. மேலும் விவோ நிறுவனம் தனது ஸ்பான்ஸர்ஷிப் உரிமையை 440 கோடி ரூபாய்க்கு விற்கவுள்ளதாலும், அதனை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் அமேசான் மற்றும் பைஜூஸ் நிறுவனங்கள் போட்டியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டியில் தற்போது இந்தியாவின் தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோவும் இணைந்துள்ளது. ஏற்கெனவே ஜியோ நிறுவனம் ஐபிஎல் தொடரின் அனைத்து அணிகளுடனும் பார்ட்னராக செயல்பட்டு வருகிறது. தற்போது ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்பிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தும் முனைப்பில் ஜியோ உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.