ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு கிரிக்கெட் திருவிழாவாகும். இந்தத் தொடரில் முதன்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த சுழற்பந்துவீச்சார் அஸ்வினுக்கு அந்த அணியின் தடைக்குப்பின் மீண்டும் சிஎஸ்கேவில் இடம் கிடைக்கவில்லை. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்ட அஸ்வினுக்கு கேப்டன் பதவியும் கொடுத்து அழகுபார்த்தனர். கடந்த இரண்டு சீசன்களில் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட அஸ்வின் அந்த அணியை சிறந்த முறையில் வழிநடத்தினார். இருப்பினும் அந்த அணி லீக் சுற்றோடு வெளியேறியது.
ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் ஒப்பந்தகாலம் முடிவடைந்ததால் அடுத்த சீசனுக்கான ஏலம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்தச் சூழலில் தற்போது பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் அந்த அணியில் இருந்து டெல்லி கேப்பிட்டள்ஸ் அணிக்கு மாற்றம் செய்யப்படுவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அஸ்வினை வாங்குவதற்கான அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக பஞ்சாப் அணியிலிருந்து அஸ்வின் நீக்கப்படுவார் என்ற செய்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இதை பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா மறுத்திருந்தார். அஸ்வின் பஞ்சாப் அணியிலிருந்து டெல்லி அணிக்கு மாற்றம் செய்யப்படும் பட்சத்தில் கே.எல். ராகுல் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.