கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகின் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரின் மூன்றாவது சீசன் முதலில் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு, பின்னர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை தொடரை ஒத்திவைப்பு முனைப்பில் ஐசிசி செயல்பட்டு வந்தது. இருப்பினும் இந்த ஆண்டில் டி20 உலகக்கோப்பை தொடர் நடத்துவது குறித்த முடிவை ஐசிசி அடுத்த மாதத்திற்குத் தள்ளி வைத்துள்ளது.
இது குறித்து பேசிய ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல், "வருகிற செப்டம்பர்- அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் தொடரை நடத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தற்போது நாங்கள் செய்து வருகிறோம். இருப்பினும் தற்போது ஐசிசியின் முடிவைப் பொறுத்தே, ஐபிஎல் தொடர் குறித்தும் எங்களால் யோசிக்க இயலும்.
மேலும் இத்தொடரின்போது பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா? இல்லையா? என்பது எனக்கு தெரியவில்லை. இருப்பினும் அப்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டே அனைத்து முடிவுகளும் மேற்கொள்ளப்படும். ஒருவேளை ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரை ஒத்திவைத்தால், முடிவு செய்தது போலவே செப்டம்பர் மாதத்தில் ஐபிஎல் தொடரை நிச்சயம் நாங்கள் நடத்துவோம்" என்றார்.