இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பிரிஜேஷ் பட்டேல் கூறுகையில், “செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நடைபெறும். இதனை அந்தந்த அணி உரிமையாளர்களிடமும் தெரிவித்துள்ளோம்.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்களுக்கும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை தங்கள் அணிக்காக விளையாடவுள்ளனர். இதன் பின்னரே அவர் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்வார்கள். ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய நகரங்களுக்கு ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுடன் பிசிசிஐ-யின் செயல்பாடு குழு சென்று அங்கு போட்டிகளை முன்னேற்பாடு பணிகளில் முழு வீச்சில் இறங்கவுள்ளது” என்றார்.
முன்னதாக, 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதால் அந்த ஆண்டின் ஐபிஎல் தொடரின் ஒரு பகுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் அங்கு ஐபிஎல்-இன் முழு தொடரும் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது.
அத்துடன் வழக்கமாக மார்ச் முதல் மே மாதம் வரை நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் கரோனா காரணமாக இந்த ஆண்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து அக்டோபர் - நவம்பர் மாதம் நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை ரத்து செய்யப்பட்டு 2022ஆம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், அதே காலத்தில் கோடிக்கணக்கில் பணம் கொழிக்கும் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ முன்வந்துள்ளது.
இதையும் படிங்க: ஐபிஎல் விளையாடுவதில் மகிழ்ச்சி - கேன் வில்லியம்சன்