ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று (நவ.6) அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 'எலிமினேட்டர்' போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐதராபாத் வீரர் கேன் வில்லியம்சன் ஐபிஎல் போட்டிகளில் தனது 14 ஆவது அரை சதத்தை பதிவு செய்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல், தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.
போட்டி முடிந்த பின் பேசிய ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், "கேன் வில்லியம்சன் ஒரு மாஸ்டர் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நியூசிலாந்திற்காக பல ஆண்டுகளாக அவர் அதைச் செய்து வருகிறார். சுழற்பந்து வீச்சாளர்கள் மிடில் ஓவர்களில் மிகவும் மெதுவாகவும் அற்புதமாகவும் பந்து வீசினர். கேன் வில்லியம்சன் போன்ற ஒரு வீரரை அணியில் வைத்திருக்கும் போது வெற்றி நமது பக்கமே இருக்கும்.
நாங்கள், தொடரில் நிலைத்து இருக்க பலம் வாய்ந்த மூன்று அணிகளை நாக் அவுட் செய்ய வேண்டியிருந்தது. இதனால், நாங்கள் எங்கள் பிளான்களை மாற்றி புதிய வியூகங்களை வகுத்தோம்.
நடராஜன் தம்பதியர்க்கு குழந்தை பிறந்துள்ளது அவர்களுக்கு வாழ்த்துகள்” எனக் கூறினார். நாளை நடைபெறும் ஐபிஎல் தொடரின் இரண்டாவது தகுதி சுற்றில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, டெல்லி அணியுடன் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி, இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதும்.