ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பாக அணியில் ஏதெனும் மாற்றத்தை செய்வது வழக்கம். ஐபிஎல் முதல் தொடரிலிருந்து பலம் வாய்ந்த அதிரடி பேட்ஸ்மேன்களுடன் கூடிய அணியாக விளங்கும் ஆர்சிபி அணியால் இதுவரை ஒருமுறைகூட கோப்பையை கைப்பற்ற முடியவில்லை என்பது அந்த அணியின் ரசிகர்களின் மத்தியில் ஆறாத வடுவாக இருக்கிறது.
இதனிடையே அடுத்த சீசனுக்கான வீரர்களின் ஏலத்தில் கலந்துகொண்ட ஆர்சிபி அணி, ஆரோன் பின்ச், கிறிஸ் மோரிஸ், டேல் ஸ்டெயின், ஜோஸ் பிலிப், கேன் ரிச்சர்ட்சன் உள்ளிட்ட சில வீரர்களை ஒப்பந்தம் செய்தது. மேலும் கேப்டன் விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், பார்த்திவ் பட்டேல், சாஹல் உள்ளிட்ட பல்வேறு வீரர்களையும் அந்த அணி தக்க வைத்துக்கொண்டது.
இதனிடையே ஆர்சிபி அணியின் நிர்வாகம் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளில் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்ற பெயரை ராயல் சேலஞ்சர்ஸ் என்று மாற்றம் செய்துள்ளது. மேலும், சமூக வலைதள கணக்குகளின் முகப்பு மற்றும் கவர் புகைப்படங்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
ஆர்சிபி அணியின் இந்த புதிய மாற்றம் குறித்து அந்த அணியை சேர்ந்தவரும், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளருமான சாஹல், தனது ட்விட்டர் பக்கத்தில் ஆர்சிபி இது என்ன மாதிரியான மாற்றம், உங்கள் புரொஃபைல் படங்களும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்களும் எங்கு சென்றுவிட்டன என நக்கலாக பதிவிட்டிருந்தார்.
இதேபோன்று பிரபல கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லேவும், ஆர்சிபியில் என்ன நடக்கிறது என்று ட்விட்டரில் கேள்வியெழுப்பியிருந்தார்.
இதே வேளையில் ஆர்சிபி அணி, தங்களின் புதிய டைட்டில் ஸ்பான்சராக முத்தூட் நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு செயல்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி அந்த அணியின் புதிய ஜெர்சியில் முத்தூட் நிறுவனத்தின் பெயர் இடம்பெறவுள்ளது. ஜெர்சியில் செய்யப்பட்டுள்ள இந்த புதிய மாற்றம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் அந்த அணிக்கு மாற்றத்தை உண்டாக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
இதையும் படிங்க: சல்மான் கானுடன் இணையும் பூஜா ஹெக்டே - 'கபி ஈத் கபி தீபாவளி'