கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இதுவரை இந்தியாவில் 11ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இதனால் ஏப்ரல் 14ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவை, மே 3ஆம் தேதிவரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் டி20 தொடரின் 13ஆவது சீசன் இந்தாண்டு மார்ச் 29ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இத்தொடர் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
ஆனால், அதிகரித்துவரும் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவை மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரை கலவரையின்றி ஒத்திவைப்பதாக பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ அலுவலர் கூறுகையில், “நாம் தற்போது பெருந்தொற்றை எதிர்த்து போராட வேண்டிய சூழலில் உள்ளோம். இதனால் நம்மால் தற்போது கிரிக்கெட், ஐபிஎல் தொடர்களைப் பற்றி விவாதிக்க இயலாது. மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளோம். மேலும் இதுகுறித்து அணி உரிமையாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மே 3ஆம் தேதிக்கு பிறகு அரசு எடுக்கும் முடிவை பொறுத்தே போட்டியை நடத்துவதா? இல்லையா? என்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:உலகக்கோப்பை தொடரோடு தோனி ஓய்வு பெற்றிருக்க வேண்டும் - அக்தர்