2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்கவுள்ளது. இதற்காக பல வெளிநாட்டு வீரர்களும் இந்த மாத தொடக்கத்திலேயே ஐக்கிய அரபு அமீரகம் பயணம் செய்து 6 நாள்கள் தனிமைப்படுத்திக் கொண்டனர். அதன் பின்னரே பயிற்சியில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டது.
இதனிடையே இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடர் நடைபெற்றதால், ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தில் அந்த அணியின் வீரர்கள் பங்கேற்க முடியாத சூழல் நிலவியது. இதனால் முக்கிய அணிகள் பெரும் பின்னடைவை சந்திக்கும் நிலை வந்தது.
இந்நிலையில் ஐபிஎல் தொடருக்காக லண்டனில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டுள்ள 21 வீரர்கள் 36 மணி நேரம் மட்டுமே தனிமைப்படுத்தப்படவுள்ளனர். இதுகுறித்து பிசிசிஐ கூறுகையில், ''இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் 36 மணி நேரம் மட்டுமே தனிமைப்படுத்தப்படவுள்ளனர். இதனால் பெரும்பாலான நட்சத்திர வீரர்கள் அந்தந்த அணிகளுக்காக போட்டிகளில் பங்கேற்பார்கள்.
இதற்காக லண்டனிலிருந்து புறப்பட்டுள்ள 21 வீரர்களுக்கும் விமானம் ஏறுவதற்கு முன்னதாகவே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் விமானத்திலிருந்து வந்திறங்குகையில் மீண்டும் பரிசோதனை செய்யப்படும்.
அவர்கள் அனைவரும் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் இருந்ததால், உள்ளூர் அலுவலர்களுடன் பேசப்பட்டது. அதனால் அவர்கள் அனைவரும் 36 மணி நேரம் மட்டும் தனிமைப்படுத்திக் கொண்டால் போதுமானது என கூறியது. இதனால் அனைத்து அணிகளுக்கும் எவ்வித பிரச்னையும் இல்லை'' என்றார்.
இதையும் படிங்க: இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டேவிட் வில்லிக்கு கரோனா!