டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதற்கு கடைசி ஓவரை ஜடேஜாவை பந்துவீச வைத்தது தான் காரணம் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டனர். இதற்கு ஆட்டம் முடிந்து விளக்கமளித்த தோனி, ''காயமடைந்து ஓய்வறைக்கு சென்ற பிராவோ மீண்டும் களத்திற்கு திரும்பவில்லை. அதனால் ஜடேஜா மற்றும் கரண் ஷர்மா ஆகியோரில் ஒருவரை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. நான் ஜடேஜாவை தேர்ந்தெடுத்தேன். தவானின் விக்கெட் மிக முக்கியம் என்பது தெரியும். அவர் கொடுத்த கேட்ச்சை பலமுறை நாங்கள் தவறவிட்டோம்.
அவரை தொடர்ந்து பேட்டிங் செய்ய அனுமதித்தால், அவரால் என்ன செய்ய முடியும் என்பது தெரியும். ஆனால் தவானை தவிர்த்து எங்களின் தோல்விக்கு வேறு எந்த காரணமும் கூறிவிட முடியாது.
![ஷிகர் தவான்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/1602698167_ai_73271_1810newsroom_1602970300_592.jpg)
மைதானத்தில் அந்த அளவிற்கு பனிப்பொழிவு இல்லை. ஆனால் இரண்டாவது பேட்டிங்கில் பிட்ச்சில் மாற்றம் இருந்தது. அதுதான் பெரும் வித்தியாசம். இந்த ஆட்டத்தில் நடந்த நல்ல விஷயம் என்னவென்றால் சாம் கரணின் 19ஆவது ஓவர் தான். ஆஃப் சைட் யார்க்கர்களை மிகச்சரியாக வீசினார். அந்த இடத்தில் சரியாக பந்துவீசினால் ரன்கள் எடுப்பது கடினம். இந்தப் போட்டி அவருக்கு நம்பிக்கையை அதிகரிக்கும்'' என்றார்.
நேற்றைய போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்ததால், மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்திற்கு சென்னை அணி தள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து நீக்கப்பட்ட ஷாய் ஹோப்...!