சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தெதி உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. பெண்மையைப் போற்றும் விதமாக மட்டுமில்லாமல், பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளை கவுரவிக்கும் வகையில்,வரலாற்றில் முதல் முறையாக சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் வீராங்கனையின் சிலையை நிறுவவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைமை செயல் அலுவலர் நிக் ஹாக்லி கூறுகையில்,"சர்வதேச கிரிக்கெட்டில் பாலின சமத்துவத்தை நிலைநாட்ட தொடர்ந்து பாடுபடுகிறோம்.
கடந்தாண்டு சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியை சுமார் 86 ஆயிரம் பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
இந்நிலையில், சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் வீராங்கனையின் சிலையை நிறுவ நியூ சௌத்வேல்ஸ் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணமாகும்" என்று தெரிவித்துள்ளார்.
இதுவரை உலகில் எந்தவொரு கிரிக்கெட் வாரியமும் கிரிக்கெட் வீராங்கனையின் சிலையை நிறுவ முன்வந்தது இல்லை. ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், அதனை முறியடித்து, வரலாற்றில் முதல் முறையாக சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் வீராங்கனையின் சிலையை நிறுவவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கேப்டனின் மகளை மணக்கும் பந்துவீச்சாளர்!