பரபரப்புக்கு பெயர் போன இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருநாட்டு கிரிக்கெட் தொடர், சமீப ஆண்டுகளாக பல்வேறு அரசியல் காரணங்களால் நடைபெறாமல் உள்ளது. இதனால், ஐசிசி, ஆசிய கோப்பை உள்ளிட்ட தொடர்களில் மட்டுமே இவ்விரு அணிகள் பலப்பரீட்சை நடத்திவருவதால், அரசியல் காரணங்களை விடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர் மீண்டும் நடைபெற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, அந்த கோரிக்கையை நீண்ட நாட்களாக முன்வைத்துவந்துவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான அப்ரிடி. அவர், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் ஆஷஸ் தொடரைவிடவும் சிறப்பு வாய்ந்த தொடர் எனவும் இருநாடுகளுக்கு இடையிலான தொடர் நடைபெற வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை டி20 தொடரில் இந்தியா பங்கேற்காது என கூறப்பட்டது. இதனால், இந்தத் தொடரில் இந்திய அணியின் போட்டிகளை பாகிஸ்தானிற்கு பதிலாக வேறு பொதுவான மைதானத்தில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவு எடுக்கும்.
ஒருவேளை இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகள் சந்திக்க நேரிட்டால் அந்தப் போட்டியை எங்கு நடத்தலாம் என்பது குறித்தும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில்தான் முடிவு எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முதன்மை நிர்வாகி வசிம் கான் கூறினார்.
இந்நிலையில், மோடி ஆட்சியில் இருக்கும்வரை இந்தியா - பாகிஸ்தான் உறவில் எந்தவித முன்னேற்றமும் இருக்காது என அப்ரிடி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

"ஒரேயோரு நபரால்தான் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான நல்லுறவு சேதமடைந்துள்ளது. அதை நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. அவர் ஆட்சியில் இருக்கும்வரை இந்தியாவிடமிருந்து எந்த ஒரு பதிலும் எங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லை. அவர் என்ன நினைக்கிறார் என்பதை இந்தியர்கள் உட்பட நாங்களும் புரிந்துகொண்டோம். எல்லையின் இருபுறம் உள்ள மக்கள் ஒருவருக்கொருவர் நாட்டிற்கு பயணிக்க விரும்புகிறார்கள்.
ஆனால், மோடிக்கு என்ன தேவை அவரது திட்டம் என்ன என்பது பற்றி எனக்கு புரியவில்லை. அவரது சிந்தனைகளெல்லாம் முற்றிலும் எதிர்மறையானதாகவே இருக்கிறது. ஆசியக் கோப்பை தொடரில், இரு அணிகளும் (இந்தியா, பாகிஸ்தான்) நிச்சயம் பங்கேற்க வேண்டும். மூன்றாவது நாட்டின் தலையீடு இல்லாமல் இரு நாடுகளும் இந்த பிரச்னைக்கு ஒரு சுமுக தீர்வு காண வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்றார்.
2008 ஆசிய கோப்பை ஒருநாள் தொடருக்கு பின், இந்தியா பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்யாமல் இருப்பதற்கு முக்கிய காரணமே அதே ஆண்டில் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்தான். அதன்பின், 2013இல்தான் இறுதியாக இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள், டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்றது.
முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடர் நடைபெற்றால், அது கிரிக்கெட்டுக்குத்தான் நல்லது என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியா - பாக். கிரிக்கெட் தொடர் நடக்க வேண்டும்': யுவராஜ் சிங் விருப்பம்