19 வயதுக்குட்பட்ட இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட யூத் ஒருநாள் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இதில், முதல் இரண்டு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை வென்ற நிலையில், கடைசி ஒருநாள் போட்டி செவ்வாய்கிழமை நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து ரன்குவிப்பில் தடுமாறியது. இறுதியில், 50 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ப்ரியம் கார்க் 52 ரன்கள் அடித்தார்.
இதைத்தொடர்ந்து, 193 ரன்கள் இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 48.2 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி இப்போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
தென் ஆப்பிரிக்க வீரர் ஜோனதன் பேர்டு ஒன்பது பவுண்டரி, ஒரு சிக்சர் என 88 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்தப் போட்டியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது.
இதைத்தொடர்ந்து, தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்டோரின் நான்கு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே உள்ளிட்ட நான்கு அணிகள் பங்கேற்கின்றன. டர்பனில் நாளை மறுநாள் தொடங்கவுள்ள இந்தத் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இதையும் படிங்க: 2019 கிரிக்கெட்: சாதனைகளும்... வேதனைகளும்...!