தற்போதைய மாடர்ன் டே கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்கள், கோட்டைத் தாண்டி கால் வைத்து வீசும் நோபால் பந்துகளை களநடுவர்கள் கண்காணிக்க பெரும்பாலான நேரங்களில் தவறுகின்றனர். இதனால் ஏராளமான போட்டிகளின் முடிவு முற்றிலும் மாறியுள்ளதை நாம் பார்த்திருப்போம்.
ஒருசில சமயங்களில் பேட்ஸ்மேன்கள் நோபால்களில் ஆட்டமிழந்தாலும், அவர்கள் நடுவர் தீர்ப்புக்கு எதிராக ரிவ்யூ கேட்கும்போதுதான் மூன்றாவது நடுவரின் கவனிப்பால் அது நோபால் எனத்தெரியவரும். அப்படி நடப்பது அரிதிலும் அரிதுதான்.
இந்நிலையில் இந்த நோபால் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஐசிசி புதிய விதிமுறையை அறிமுகமப்படுத்தியுள்ளது. அதாவது, இனி பந்துவீச்சாளர்கள் நோபால் வீசுகிறார்களா என்பதை மூன்றாவது நடுவர்களே கண்காணிப்பர் என்று தெரிவித்துள்ளது.
இந்த விதிமுறை இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையே இன்று தொடங்கும் முதல் டி20 போட்டியிலிருந்து அறிமுகமாகவுள்ளது. பந்துவீச்சாளர்கள் வீசும் ஒவ்வொரு பந்தையும் மூன்றாவது நடுவர் ரீப்ளே மூலம் அதைக் கண்காணித்துவருவர். அப்படி பந்துவீச்சாளர் நோபால் வீசினால், மூன்றாவது நடுவர் களநடுவருக்கு நோபால் என தகவல் அளிப்பார். மூன்றாவது நடுவரிடம் இந்த விதிமுறை ஒப்படைப்பதால், இனி போட்டியின் முடிவுகள் நேநோபால்களால் மாறாது என எதிர்பார்க்கப்படுகிறது.