இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று ஒருநாள் போட்டி, மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. டிசம்பர் 6ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் போட்டித் தொடர் டிசம்பர் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
முதல் டி20 போட்டி மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுவதால், மாநிலம் முழுவதும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் போட்டிக்குப் பாதுகாப்பு வழங்க இயலாது என அம்மாநில போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருந்தது.
இதனால் 6ஆம் தேதி வான்கடே மைதானத்தில் நடைபெற இருந்த ஆட்டம் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. டிசம்பர் 11ஆம் தேதி நடைபெற இருக்கும் 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி, மும்பை வான்கடே மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
சமீபத்தில் தான் அயோத்தி வழக்கின் தீரப்பு வெளியாகியுள்ள நிலையில், டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தில் எந்த விதமான பிரச்னையும் ஏற்படாமல் தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த டி20 போட்டி, வேறு இடத்திற்கு மாற்றப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
இதையும் படிங்க: சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!