துபாய்: பிரபல விமான நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீது தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் தென் ஆப்பரிக்கா டெஸ்ட் கேப்டன் டூபிளஸ்சிஸ்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பரிக்கா அணி டி20, டெஸ்ட், ஒரு தொடர்களில் விளையாடுகிறது. இதையடுத்து டெஸ்ட் தொடர் வரும் அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக தென் ஆப்பரிக்கா அணியின் டெஸ்ட் கேப்டன் டூபிளஸ்சிஸ் துபாய் வழியாக இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், துபாய்க்கு செல்வதற்காக அவர் பயணிக்க இருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் நான்கு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த டூபிளஸ்சிஸ், 'ஒரு வழியாக நான்கு மணி நேரம் தாமதமாகி துபாய்க்கு புறப்பட்டுள்ளேன். இதனால் இந்தியாவுக்கு செல்லும் அடுத்த விமானத்தை தவறவிட்டுள்ளேன். இனி 10 மணி நேரம் கழித்துதான் அடுத்த விமானம்' என்று கோபத்தை வெளிப்படுத்தும் ஸ்மைலியுடன் ட்வீட் செய்திருந்தார்.
இதைத்தொடர்ந்து துபாய் வந்து சேர்ந்த டூபிளஸ்சிஸுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. பத்திரமாக அவர் துபாய் வந்து சேர்ந்தாலும் அவரது கிரிக்கெட் கிட் பேக் வந்து சேராமல் போயுள்ளது. இதையடுத்து, வாழ்க்கை உங்களுக்கு எலுமிச்சை பழம் தந்தால், எலுமிச்சை ஜூஸ் செய்துவிடுங்கள். நான் வந்துவிட்டேன். ஆனால் என் கிரிக்கெட் கிட் பேக் வந்து சேரவில்லை. இதை நினைத்து சிரிப்புதான் வருகிறது.
இந்த நாளில் எனக்கு எல்லாம் தவறாக நடக்கிறது. மோசமான பயண அனுபவத்தை தந்த பிரிட்டிஷ் ஏர்வேஸுக்கு ஒரு வாவ். இதனிடையே என் கிரிக்கெட் கிட் பேக் வந்து சேரும் என நம்புகிறேன் என்று ஏமாற்றுடன் தனது அடுத்த ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இந்தியா - தென் ஆப்பரிக்கா இடையில் முதல் டி20 போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் கோலியின் அதிரடி ஆட்டத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து மூன்றாவது டி20 போட்டி பெங்களூருவில் நாளை நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க:
ஒரு கையில் கேமரா... மறு கையில் சூப்பர் கேட்ச்..! - அசத்திய போட்டோகிராபர்!