நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதுவரை நான்கு போட்டிகள் நடந்துள்ள நிலையில், இந்திய அணி 4-0 என்ற வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இன்று ஐந்தாவது டி20 போட்டி இன்று தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கைத் தேர்வுசெய்துள்ளார்.
இந்திய அணியில் கடந்த போட்டியைப் போலவே சில வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இவருக்குப் பதிலாக ரோஹித் கேப்டன்சியை மேற்கொள்கிறார். ரோஹித் சர்மா மூன்றாவது வீரராகக் களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை வில்லியம்சன் காயம் காரணமாக இந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதனால் டிம் சவுதியே கேப்டனாகத் தொடர்கிறார்.
ஆட்டம் நடக்கும் பேல் ஓவல் மைதானம் பேட்டிங்கிற்குச் சாதகமான பிட்ச் என்பதால், அதிக ரன்கள் குவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து அணி ஆறுதல் வெற்றிக்காகவும், இந்திய அணி ஒய்ட் வாஷ் செய்வதற்காகவும் விளையாடும் என்பதால் ரசிகர்களிடையே இந்தப் போட்டிக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய அணி விவரம்: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, சிவம் தூபே, ஷர்துல் தாகூர், சாஹல், நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர், பும்ரா.
நியூசிலாந்து அணி விவரம்: டிம் சவுதி (கேப்டன்), கப்தில், காலின் முன்ரோ, டாம் ப்ரூஸ், ராஸ் டெய்லர், டிம் செஃபெர்ட், சாண்ட்னர், டேரில் மிட்சல், இஷ் சோதி, பென்னட், ஸ்காட் கூகலைன்.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: சாம்பியன் மகுடத்தை சூடப்போவது யார்?