இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படு தோல்வியடைந்தது. இந்நிலையில் இரண்டாவது போட்டி நாளை மறுநாள்(பிப்.13) முதல் பிப்ரவரி 17ஆம் தேதிவரை நடைபெற உள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக முதல் டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. பின்னர் தமிழ்நாடு அரசு விளையாட்டு போட்டிகளைக் காண 50 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கலாம் என உத்தரவிட்டதையடுத்து, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு 50 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என பிசிசிஐ அறிவித்தது.
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் மொத்தம் 50 ஆயிரம் இருக்கைகளை கொண்டது. இதில் அரசின் ஆணைப்படி 25 ஆயிரம் பார்வையாளர்கள் டெஸ்ட் போட்டியைக் காண தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் கடந்த எட்டாம் தேதி ஆன்லைன் மூலம் முன்பதிவு தொடங்கியது. விற்பனை தொடங்கிய சில மணி நேரத்திலேயே டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத்தீர்த்தன.
ஆன்லைனில் முன்பதிவு செய்த ரசிகர்களுக்கு போட்டிக்கான டிக்கெட் நேரடியாக சேப்பாக்கத்தில் உள்ள கவுன்ட்டரில் இன்று (பிப்.11) முதல் வழங்கப்பட்டுவருகிறது. இந்த டிக்கெட்டை பெறுவதற்காக காலை முதலே கிரிக்கெட் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கரோனா பரவலுக்கு பிறகு இந்தியாவில் நடக்கும் முதல் கிரிக்கெட் தொடர் இது என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் டிக்கெடுகளை வரிசையில் நின்று வாங்கி செல்கின்றனர். இருப்பினும் ஆன்லைனில் முன்பதிவு செய்தால் நேரடியாக உள்ளே அனுமதிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: முதல் சுற்றோடு நடையைக் கட்டிய ஷரண், அங்கிதா!