இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடைபெறுகிறது. இதனிடையே தீபாவளிப் பண்டிகைக்குப் பின் டெல்லி முழுவதிலும் காற்று மாசுபாடு 999 டிகிரி என்ற அபாய வெப்பநிலையை அடைந்திருப்பதாக அம்மாநிலம் வெளியிட்ட காற்று தர அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் இந்தியா - வங்கதேச டி20 போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் போட்டி திட்டமிட்டபடி டெல்லியில் நடைபெறும் என்று பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்தது.
இந்த சூழலில் இந்தியா வந்துள்ள வங்கதேச வீரர்கள், டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது வங்கதேச வீரர் லிட்டன் தாஸ், முகமூடி அணிந்துகொண்டு பயிற்சியில் ஈடுபட்டார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதே வேளையில் வங்கதேச வீரர்கள் முஷ்பிகுர் ரஹிம், முஸ்தபிஷுர் ரஹ்மான் ஆகியோர் எந்தவொரு பாதுகாப்பு உபகரணங்களையும் அணியாமல் இருந்தனர்.
டெல்லியில் காற்று மாசு குறையும் வரை அங்கு எந்தவொரு விளையாட்டுப் போட்டியையும் நடத்தக்கூடாது என முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்பியுமான கவுதம் காம்பீர் முன்னதாக தெரிவித்திருந்தார்.