19 வயது உட்பட்டோருக்கான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில், இந்தியா, இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய மூன்று அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபட்டன. இதில், நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்கொண்டது.
இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 261 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, மஹ்மதுல் ஹசன் ஜாய் 109 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் கார்திக் தியாகி, சுஷாந்த் மிஷ்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 262 ரன்கள் இலக்குடன் ஆடிய இந்திய அணி 49ஆவது ஓவரில் நான்கு விக்கெட்டுகளை பறிகொடுத்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம், இந்திய அணி இப்போட்டியில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை வென்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக, கேப்டன் பிரயம் கார்க் 73, துருவ் ஜூரேல் 59, திவ்யான்ஷ் சக்சேனா 55 ரன்களை அடித்தனர்.