அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அனி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் - தவான் இணை சிறப்பாக அடித்து ரன்களை சேர்த்தது. அதிரடியாக ஆடிய இந்த கூட்டணி 6 ஓவர்களில் 52 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தது. பின்னர் 7.5 ஓவரின்போது ஒஷானே தாமஸ் வீசிய பந்தை தவறாக கணித்த தவான் 23 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து விராட் கோலி களமிறங்கினார். விராட் ஒரு முனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் ரோஹித் பவுண்டரியும் , சிக்சர்களுமாய் விளாசினார். இதற்கிடையே ரோஹித் ஷர்மா டி20 போட்டிகளில் 17ஆவது அரைசதத்தைப் பதிவு செய்தார். பின்னர் இந்திய அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
சிறப்பாக ஆடிய ரோஹித் 67 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, தொடர்ந்து நான்காவதாக களமிறங்கிய ரிஷப் பண்ட் 4 ரன்களில் வந்த வேகத்தில் வெளியேற, அடுத்த ஓவரிலேயே விராட் கோலி 28 ரன்களில் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்ததால் இந்திய அணி 18 ஓவர்களில் 141 ரன்கள் எடுத்தது.
பின்னர் 19ஆவது ஓவரில் மணீஷ் பாண்டே 6 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் குருணால் பாண்டியா, ஜடேஜா ஆகியோரின் அதிரடியான சிக்சர்களால் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய குருணால் பாண்டியா 20 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக ஒஷானே தாமஸ், காட்ரெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.