இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் பார்வையாளர்களின்றி நடத்தப்படவுள்ளது.
இதனால் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டியும் பார்வையாளர்களின்றி காலி மைதானங்களில்தான் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த மாதம் முதல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் மைதானங்களில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.
இதனால் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் பார்வையாளர்கள் முன்னிலையில் நடக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
40 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் உள்ள மைதானங்களில் 10 ஆயிரம் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளதால், டி20 உலகக்கோப்பைத் தொடர் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.