சிட்னியில் நேற்று நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இப்போட்டியின் போது இந்திய அணி பந்துவீசுவதற்கு அதிகபடியான நேரத்தை எடுத்துக் கொண்டதாக போட்டி நடுவர் டேவிட் பூன் புகாரளித்தார்.
இப்புகாரை விசாரித்த ஐசிசி, இந்திய அணி மீதான குற்றச்சாட்டை ஏற்றுகொண்டது. மேலும் இது ஐசிசியின் ஒழுங்கு நடத்தை விதிகளின் படி குற்றம் என்பதால், இந்திய அணி வீரர்களுக்கு போட்டி கட்டணத்திலிருந்து 20 விழுக்காடு அபராதம் விதித்து உத்தரவிட்டது.
இதுகுறித்து ஐசிசி வெளியிட்ட அறிக்கையில், “ஐசிசி ஒழுங்கு நடத்தை விதி பிரிவு 2.22 படி, இந்திய அணி வீரர்கள் பந்துவீச அதிக நேரத்தை எடுத்துக்கொண்டதனால், அவர்களுக்கு போட்டி கட்டணத்திலிருந்து 20 விழுக்காடு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்குற்றச்சாட்டை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒப்புக்கொண்டு, அபராதத்தை ஏற்றுள்ளதால், அவர் விசாரணைக்கு வரத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியின் போது பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக இந்திய அணி வீரர்களுக்கு போட்டி கட்டணத்திலிருந்து 20 விழுக்காடு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பஜ்ரங் புனியா, இளவெனில் வளரிவானுக்கு இந்திய விளையாட்டு விருதுகள்!