INDvsRSA: இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் கடந்த 19ஆம் தேதி இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ரோஹித் சர்மா, அஜிங்கியா ரஹானே ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல், முதல் இன்னிங்ஸில் 162 ரன்கள் எடுத்தது.
இதனால் தென் ஆப்பிரிக்க அணி 335 ரன்கள் பின்தங்கியது. பின்னர் நேற்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு ஃபாலா - ஆன் வழங்கியது. பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் வீரர்கள் தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். தொடக்க வீரர்கள் டி காக் 5, எல்கர் 16, கேப்டன் டூ ப்ளஸிஸ் 4, பவுமா 0 என பெரிய ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து, வெளியேற இந்திய அணி வெற்றியின் அருகில் சென்றது.
ஆனால், முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிய லிண்டே - ப்ரூயின் இணை இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறிது நேரம் தாக்குப்பிடித்து இந்திய அணியின் வெற்றியைத் தள்ளி போட்டனர்.
இதையடுத்து இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தில் நதீம் பந்தில் ப்ரூயின் 30 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ரபாடா 12 ரன்களுக்கும் இங்கிடி ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ரன்களுக்கு சரணடைந்தது. இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பாக முகமது ஷமி மூன்று விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணியை வொயிட் வாஷ் செய்தது.
இந்த போட்டியிலும், இத்தொடரிலும் சிறப்பாக செயல்பட்ட ரோகித் சர்மா ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: #INDvSA: வெற்றிக்காக இன்னும் ஒருநாள் காத்திருக்கும் இந்திய அணி!