இந்திய மகளிருக்கான மகளிர் சீனியர் டி20 சேலஞ்சர் டிராபி தொடர் நடைபெற்றுவருகிறது. இதன் இன்றைய ஆட்டத்தில் இந்தியா பி அணியை எதிர்த்து இந்தியா சி அணி ஆடியது. இந்தியா பி அணிக்கு ஸ்மிருதி மந்தனாவும், சி அணிக்கு வேதா கிருஷ்ணமூர்த்தியும் கேப்டனாகச் செயல்பட்டனர்.
இதில் டாஸ் வென்ற இந்தியா சி அணி கேப்டன் வேதா கிருஷ்ணமூர்த்தி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து பி அணியில் தொடக்க வீரர்களாக வனிதா - ஸ்மிருதி மந்தனா ஜோடி களமிறங்கியது. இதில் கேப்டன் ஸ்மிருதி 6 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளிக்க, தொடர்ந்து வந்த அனுபவ வீராங்கனை ஜெமிமா 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து தொடக்க வீராங்கனை வனிதா 11 ரன்களில் வெளியேறியதையடுத்து, பின்னர் களமிறங்கிய ரிச்சா - பாட்டீல் (patil) இணை சிறிது நேரம் தாக்குபிடித்தனர்.
இந்த ஜோடி இணைந்து 34 ரன்கள் சேர்த்தபோது பாட்டீல் 11 ரன்னிலும், ரிச்சா 25 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததையடுத்து, இறுதியாக இந்தியா பி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 94 ரன்களைச் சேர்த்தது. இந்தியா சி அணி சார்பாக ராஜேஸ்வரி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியா சி அணியில் சஃபாலி வெர்மா - நிஷ்ரத் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். மூன்று ஓவர்களில் 26 ரன்களில் சேர்த்த நிலையில், இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறயதால் ஆட்டத்தில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து வந்த ஹேமலதா நிதானமாக ஆட, பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் எளிதாக விக்கெட்டுகளைக் கொடுத்தனர்.
16ஆவது ஓவரில் ஹேமலதா 20 ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஒவர்களில் இந்திய சி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா பி அணி சார்பாக சுஸ்ரீ துப்யதர்ஷினி (sushree Dibyadarshini) 3 மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையும் படிங்க: டி20 போட்டிகளில் ஓய்வு: மனம்திறந்த மலிங்கா!