இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இந்நிலையில் போட்டி முடிவுக்கு பின் செய்தியாளர்களைச் சந்திந்த இந்திய கேப்டன் விராட் கோலி, “இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வெல்வதற்கு ரோகித் சர்மாவின் சதம் தான் உத்வேகம் அளித்தது” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய விராட் கோலி, “இரண்டாவது டெஸ்ட்டில் மீண்டும் வெற்றி பெற்றதுதான் எனக்கு மிக்க மகிழ்ச்சியளித்தது. முதல் டெஸ்ட் தோல்வி நாங்கள் எதிர்பாராத ஒன்று. ஏனெனில் அப்போட்டியில் டாஸ் அதில் முக்கியப் பங்கு வகித்தது.
முதல் டெஸ்ட்டில் தோற்ற பிறகு மீண்டெழுவதற்கு ரோகித் சர்மா அடித்த சதம் மிகப்பெரியது. அத்தகைய பிட்சில் 150 ரன்களுக்கு மேல் அடிப்பது இயல்பான விசயமல்ல. மேலும் இத்தொடர் முழுதும் முக்கியமான இன்னிங்ஸ்களை அவர் ஆடினார்.
அதேபோல் இளம் வீரர்களான அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் தற்போது டெஸ்ட் போட்டிகளுக்குத் தயாராகி விட்டனர். இளம் வீரர்கள் அணிக்குள் வந்து பயமின்றி கிரிக்கெட்டை விளையாடுவது மன நிறைவைத் தருகிறது.
ஏனெனில் நான்காவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர் இணை ஆட்டத்தின் போக்கை முற்றிலுமாக மாற்றினர். இதன் காரணமாகவே இந்திய அணி தொடரை வென்றது. அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அணிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து வெளியேறிய இந்திய இணை!