ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்கவுள்ளது. அதில் வருகிற நவ. 27ஆம் தேதிமுதல் ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள கே.எல். ராகுல் செய்தியாளர் சந்திப்பின்போது முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் இடத்தை இந்திய அணியில் வேறு யாராலும் நிரப்ப இயலாது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ராகுல், "மகேந்திர சிங் தோனியின் இடத்தை இந்திய அணியில் யாராலும் நிரப்ப முடியாது. அவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்குத் தேவையை எவ்வாறு பூர்த்திசெய்வது என்பது குறித்த வழியைக் காட்டியுள்ளார். என்னால் முடிந்தவரை அவரைப் போன்று சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்க முயற்சி செய்வேன். ஏனெனில் விக்கெட் கீப்பராக அந்தப் பொறுப்பு என்னிடம் உள்ளது.
மேலும் நான் ‘பவர் ஹிட்டிங்’ பேட்ஸ்மேன் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன். அதனை என்னால் செய்யவும் இயலாது. என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியின் வெற்றிக்கு உதவுவேன் என நம்புகிறேன். ஏனெனில் அத்தகுதி என்னிடம் உள்ளது என்று எனக்குத் தெரியும்.
அதேசமயம் தேவைப்படும் நேரத்தில் அதிரடியாக விளையாடி ரன்களை எடுக்க முயற்சிப்பேன். இதனால் எனது அணிக்கு வெற்றி கிடைக்கும் என்றால் அது எனக்கு மகிழ்ச்சியான ஒன்றே" என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள கே.எல். ராகுல், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 670 ரன்களைக் குவித்து, தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:‘ஆஸ்திரேலிய தொடரை எதிர்நோக்கியுள்ளேன்’ - சுப்மன் கில்