இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் சிட்னியில் நடைபெறவுள்ளது. முன்னதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகினர்.
பின்னர் அவர்களுக்கு மாற்று வீரர்களாக ஷர்துல் தாக்கூர், நடராஜன் தங்கராசு ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, சிராஜ் ஆகியோர் உள்ள நிலையில் மூன்றாவது பந்துவீச்சாளராக யார் இடம்பெறுவார்? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
இதுகுறித்து ஷர்துல் தாக்கூரின் சிறுவயது பயிற்சியாளரான தினேஷ் லாட் ஈடிவி பாரத்துடனான சிறப்பு உரையாடலின்போது சைனி, நடராஜனைவிட ஷர்துல் சிறந்தவர் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய தினேஷ் லாட், இத்தொடரில் ஷர்துல் தாக்கூர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று தோன்றுகிறது. ஏனெனில் அவர் முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய ஏ அணியிலும் விளையாடி சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதனால் அவர் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் தலைவலியாக இருப்பார் என்று தெரிவித்தார்.
பின் சைனி, நடராஜன், தாக்கூர் மூவரில் உங்களது தேர்வு யாராக இருக்கும்? என்ற கேள்விக்கு பதிலளித்த தினேஷ் லாட், சிரித்தபடியே எனது மாணவன் ஷர்துல் தாக்கூரைத் தேர்வு செய்வேன். ஆனால் அவர் எனது மாணவன் என்பதற்காக நான் இதனை கூறவில்லை, கடந்த சில ஆண்டுகளாக அவர் இந்தியா ஏ மற்றும் ரஞ்சி கோப்பை தொடர்களில் செயல்பட்டுள்ள விதத்தை வைத்துதான் கூறுகிறேன்.
ஏனெனில் கடந்த மூன்று ஆண்டுகளில் ரஞ்சி தொடரில் விளையாடி வரும் ஷர்துல், அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். சைனி, நடராஜனைக் காட்டிலும் ஷர்துலுக்கு அதிக அனுபவம் உள்ளது. இதன் காரணமாகவே நான் ஷர்துல் தாக்கூர் டெஸ்ட் அணியில் இடம்பெற வேண்டும் என்று கூறுகிறேன் என பதிலளித்தார்.
இதையும் படிங்க:பஜ்ரங் புனியாவின் முகாமை நீட்டித்தது மிஷன் ஒலிம்பிக் செல்!