இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் கரோனா பரவல் காரணமாக இப்போட்டியைக் காண 25 விழுக்காடு பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில் மெல்போர்னில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியைக் காண வந்த பார்வையாளர் ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது சமீபத்தில் உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து சிட்னி டெஸ்ட் போட்டியைக் காண வரும் பார்வையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என நியூ சௌத் வேல்ஸ் அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து நியூ சௌத் வேல்ஸ் சுகாதார அமைச்சர் பிராட் ஹஸார்ட் கூறுகையில், “கரோனா வைரஸ் பரவல் காரணமாக, சிட்னி டெஸ்ட் போட்டியைக் காண வரும் பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அமர்வில் மட்டுமே இருக்க வேண்டும். அதேசமயம் பார்வையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
மேலும் தண்ணீர், உணவு அருந்தும்போது மட்டும் பார்வையாளர்கள் தங்களது முகக்கவசத்தை கழற்றலாம். பார்வையாளர்களைக் கண்காணிப்பதற்காக சிறப்பு மருத்துவ குழுவும் மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும்” என தெரிவித்தார்.
முன்னதாக சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளுக்கு 50 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்த நிலையில், கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் தற்போது 25 விழுக்காட்டினர் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வீடு திரும்பும் செளரவ் கங்குலி - மருத்துவமனை முன்பு திரண்ட ரசிகர்கள்