கிரிக்கெட்டில் தலை சிறந்த சுழற்பந்துவீச்சாளராகத் திகழ்ந்தவர் இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன். டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் போன்ற பல்வேறு சாதனைகளை படைத்தவர் முரளிதரன். இருப்பினும் தனது ஆரம்ப காலகட்டத்தில் பல சவால்களை கடந்துதான் இவர் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.
1995 - 96இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முரளிதரனின் பந்துவீச்சு சந்தேகத்திற்கு இடமாக இருப்பதாக கூறி நடுவர் தொடர்ந்து ஏழு முறை நோபால் என்று அறிவித்தார்.
இருந்தாலும் மனம் தளராத முரளிதரன் தொடர்ந்து தனது பந்துவீச்சு முறையில் எந்த தவறும் இல்லை என்பதை நிரூபித்து பிற்காலத்தில் தலைச்சிறந்த சுழற்பந்து வீச்சாளராக உருவெடுத்தார்.
இந்நிலையில், தனது ஆரம்பகால கிரிக்கெட்டில் சந்தித்த சவால் குறித்தும் மனவலிமையின் முக்கியத்துவம் பற்றியும் அவர் கூறுகையில்,
"அந்த டெஸ்ட் (ஆஸி. தொடர்) தொடரின்போது எனது பந்துவீச்சு முறை சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையில் எனது பந்துவீச்சு முறை சந்தேகத்திற்கிடமாக இருப்பது தெரியவந்திருந்தால் நான் ஆஃப் ஸ்பின்னரில் இருந்து நிச்சயம் லெக் ஸ்பின்னராகி இருப்பேன்.
ஏனெனில் நான் இளம் வயதாக இருந்தபோது ஆஃப் ஸ்பின் மட்டுமின்றி லெக் ஸ்பின்னும் வீசி வந்தேன். அந்த அளவிற்கு நான் மனதளவில் நான் என்னை தயார்படுத்திக் கொண்டேன்.
கிரிக்கெட் மட்டுமின்றி எந்த விளையாட்டாக இருந்தாலும் ஒரு வீரர் மனரீதியாக தன்னை தயார்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியமாகும். நல்ல நுட்பம் கொண்ட வீரர்களும் மனவலிமை இல்லாததால் பெரிய அளவில் சாதிக்க முடியாமல் போயுள்ளனர். எனவே நாம் தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல் எப்போதும் மன உறுதியுடன் இருக்க வேண்டும்.
அதேசமயம் கிரிக்கெட் விளையாடும்போது நீங்கள் எப்போதும் இரண்டு பிளான்களை வைத்திருக்க வேண்டும். ஒரு பிளானை மட்டுமே சார்ந்து இருக்கக் கூடாது" என்றார்.