ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நாளை மறுநாள் அடிலெய்டில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் மீது நம்பிக்கை வைத்து அவரை களமிறக்க வேண்டுமென அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பாண்டிங், “நான் ஜோ பர்ன்ஸின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். அவர் சரிவர ரன்களை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், அவரது திறனை நான் அறிவேன். மேலும் இதற்கு முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அவர் தனது சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் நான்கு சதங்களையும், 40 ரன்களை சராசரியாகவும் வைத்துள்ளார். இது அவர் அணியில் இடம்பிடிக்க போதுமான ஒன்று. மேலும் மார்கஸ் ஹாரிஸுடன் ஒப்பிடும்போது பர்ன்ஸ் சிறப்பான ஆட்டங்களையே வெளிப்படுத்தியுள்ளார். இதனால்தான் நான் பர்ன்ஸை ஆதரிக்கிறேன்.
அதேசமயம் அணியில் மேத்யூ வேட் இடம்பெற்றுள்ளதால், தொடக்க வீரர்களாக வலது கை பேட்ஸ்மேன் மற்றும் இடது கை பேட்ஸ்மேன் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. என்னைப் பொறுத்தவரை மேத்யூ வேட் - ஜோ பர்ன்ஸ் இணை இன்னிங்ஸை தொடங்கினால் சிறப்பாக இருக்கும். இதனால் ஆஸ்திரேலிய அணி பர்ன்ஸின் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்காக 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ பர்ன்ஸ் 1379 ரன்களை எடுத்துள்ளார். இதில் நான்கு சதங்களும் அடங்கும்.
இதையும் படிங்க:ரிஷப் பந்த் அணிக்கு பலம் சேர்ப்பார் - சுனில் கவாஸ்கர்