இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 4ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலோ அல்லது டிராவில் முடிந்தாலோ உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
ஒரு வேளை இந்திய அணி இப்போட்டியில் வெற்றி பெற்றால், வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்தாண்டு ஜூன் மாதம் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், இந்தாண்டு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடும் பட்சத்தில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் மீண்டும் ஒத்திவைக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் எஹ்சன் மாணி, "கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்தாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், நடப்பாண்டு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. வரும் ஜூன் மாதத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிகள் நடைபெறவுள்ளதால், இந்தாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்துவது சந்தேகம் தான்.
மேலும், ஜூன் மாதத்திற்கு பிறகு சர்வதேச போட்டிகள் நடைபெறவுள்ளதால், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2023ஆம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட வாய்புள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஓய்வுக்கு பிறகும் களமிறங்கும் யூசுப் பதான்!