கரோனா பரவல் காரணமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் ஒத்திவைக்கப்படுவதாக நேற்று இரவு அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பில், ''ஆஸ்திரேலியாவில் 2020ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் 2021ஆம் ஆண்டு அக்டோபர்-நவம்பரில் டி20 உலகக்கோப்பையும், 2022ஆம் ஆண்டு அக்டோபர்-நவம்பரில் ஒரு டி20 உலகக்கோப்பையும் நடத்தப்படும். 2023ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை ஏப்ரல் மாதத்திலிருந்து அக்டோபர்-நவம்பருக்கு மாற்றிவைக்கப்படவுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 2023ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில்தான் நடைபெற வேண்டும். ஆனால், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள உலகக்கோப்பை எந்த ஆண்டில் நடைபெறவுள்ளது, யார் நடத்துவார்கள் என்ற விவரங்களை ஐசிசி அறிவிக்கவில்லை.
இதனால் 2021ஆம் ஆண்டு இந்தியாவில் நடக்கவிருந்த டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவுக்கு மாற்றப்படுமா அல்லது 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா நடத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஆகிய கிரிக்கெட் வாரியங்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே டி20 உலகக்கோப்பை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் குறித்த அறிவிப்பை பிசிசிஐ எப்போது வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உடல் நலம் சரியில்லாததால் பயிற்சியிலிருந்து விலகிய போல்ட்!