கரோனா வைரஸ் பெருந்தொற்றால் இந்தாண்டு நடைபெறவிருந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவிருந்தது.
தற்போதைய சூழலில் இந்தத் தொடர் தள்ளி வைக்கப்படும் என்ற செய்திகள் கடந்த சில மாதங்களாகவே வெளியாகின. இந்நிலையில் கரோனா வைரஸ் காரணமாக இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் தள்ளி வைக்கப்பட்டதாக ஐசிசி இன்று (ஜூலை20) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஐசிசி இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக்கோப்பை தொடருக்கான தேதியையும் வெளியாகியுள்ளது.
அதன் படி, 2021இல் டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. இதன் இறுதிப்போட்டி நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 2022ஆம் ஆண்டிலும் டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. இதன் இறுதிப் போட்டி நவம்பர் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதைத்தொடர்ந்து 2023இல் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அதன் இறுதிப்போட்டி நவம்பர் 26ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஐசிசியின் இந்த முடிவால் பிசிசிஐ ஐபிஎல் தொடர் நடத்துவதற்கான செய்தியை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.