இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வரும் டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. கடந்த முறை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது.
இதில் சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் மட்டும் இடம் பெற்றிருந்த இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்நிலையில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் குல்தீப் ஆஸ்திரேலிய அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்திய அணியில் உள்ள சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், குல்தீப் யாதவ், ஜடேஜா இவர்களில் யாரை தேர்ந்தெடுப்பது என்பது தேர்வுக்குழு தலைவர்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கும்.
டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் நல்ல சாதனைகளை படைத்துள்ளார். ஆனால் ஆஸ்திரேலிய மண்ணில் அவரது செயல்பாடு சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. மறுமுனையில் ஜடேஜா சிறந்த ஆல்-ரவுண்டராக வளர்ந்தாலும் அவர் பந்து வீச்சில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் குல்தீப் யாதவின் பந்துவீச்சு ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் சிறப்பாக எடுப்படும். இருப்பினும் அவரை அணியில் தேர்ந்தெடுக்கும் முடிவு தைரியமானதாக இருக்கும்" என்றார்.