ஜான் ரைட்டுக்கு அடுத்தபடியாக இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த பயிற்சியாளர் என்றால் அது கேரி கிர்ஸ்டன்தான். 2008 முதல் 2011ஆம் ஆண்டுவரை அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த காலம் ரசிகர்களால் பொற்காலமாகவே பார்க்கப்படுகிறது.
அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது, 28 வருடங்களுக்கு பிறகு உலகக் கோப்பை வென்றது போன்ற பல்வேறு சாதனைகள படைத்தது.
இந்த நிலையில் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்காமல் தான் எப்படி இந்திய அணியின் பயிற்சியாளர் ஆனேன் என்ற விவரத்தை அவர் சுவாரசியமாக பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "எனக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்க விருப்பம் இல்லை. அந்தப் பதவிக்கு நான் விண்ணப்பிக்கவும் இல்லை. ஆனால் பயிற்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்த சுனில் கவாஸ்கர் உங்களுக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்க விருப்பமா என்று மின்னஞ்சல் அனுப்பினார்.
இது போலியானதாக இருக்கும் என நினைத்து நான் இதற்கு பதில் அளிக்கவில்லை. பிறகு மீண்டும் அவரிடமிருந்து மின்னஞ்சல் வந்தது. அதில் பயிற்சியாளருக்கான நேர்காணலில் பங்கேற்க நீங்கள் வருவீர்களா எனக் கேட்டிருந்தார்.
அவரது இந்த மின்னஞ்சலை நான் என் மனைவிடம் காண்பித்தேன். அவர் இந்திய அணிக்கு தவறான நபர் பேய் பிடிக்கிறார் போல என கிண்டல் அடித்தார்.
சரி நம்மை அழைக்கிறார்கள் என்று நான் நேர்காணலில் பங்கேற்பதற்காக இந்தியா சென்றடைந்தேன். நேர்காணலில் பங்கேற்றதும் அங்கு நடந்ததும் முற்றிலும் விநோதமான அனுபவம்.
நேர்காணலுக்கு சென்றபோது, அனில் கும்ப்ளே (அப்போதைய டெஸ்ட் கேப்டன்) என்னை நோக்கி பலமாக சிரித்தார். அதுமட்டுமில்லாது, நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள் என்று என்னிடம் கேள்வி கேட்டார். உங்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக நேர்காணலுக்கு வந்திருக்கிறேன் என்றேன்.
நேர்காணலில் அமர்ந்திருந்தபோது சுனில் கவாஸ்கர், ரவிசாஸ்திரி ஆகியோரிடம் எனக்கு பயிற்சியாளர் அனுபவம் கிடையாது. இதுவரை நான் எந்த அணிக்கும் பயிற்சி அளித்ததில்லை என திட்டவட்டமாக கூறினேன்.
அப்போது பிசிசிஐ அலுவலர் ஒருவர், இந்திய அணியின் எதிர்காலத் திட்டம் குறித்து உங்களது பார்வை என்ன என்ற கேள்வியை கேட்டார். என்னிடம் எந்தத் திட்டமும் இல்லை என்றேன். நேர்காணலுக்கு தயாராகி வருமாறு யாரும் என்னிடம் சொல்லவில்லை.
கமிட்டியில் இருந்த ரவி சாஸ்திரி என்னிடம், 'கேரி, தென்னாப்பிரிக்க அணியாக இந்தியர்களை வீழ்த்த நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டார்.
அதற்கு நான் அந்த நாளில் எது தேவையோ அதை சரியாக பயன்படுத்துவேன் என இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்குள் பதிலளித்தேன். நான் கூறிய பதில் அவர்களுக்கு திருப்திகரமாக இருந்தது.
அடுத்த நான்கு நிமிடங்களில் எனக்கான நேர்காணல் முடிந்தபோது பிசிசிஐ செயலர் பயிற்சியாளருக்கான ஒப்பந்தத்தை என்னிடம் வழங்கினார்.
அந்த ஒப்பந்தத்தை வாங்கி பார்த்தபோது எனது பெயருக்கு பதிலாக முதல் பக்கத்தில் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சாப்பலின் பெயர் இடம்பெற்றிருந்தது. நீங்கள் பழைய ஒப்பந்தத்தை எனக்கு கொடுத்துள்ளீர்கள் என அவரிடம் தெரிவித்தேன்.
அவர் அந்த ஒப்பந்தத்தை வாங்கி கிரேக்கர்களின் பெயரை பேனாவால் அடித்துவிட்டு எனது பெயரை எழுதினார். இது எல்லாமே ஏழு நிமிடத்தில் முடிந்தது" என்றார்.