கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி மூன்று ஒருநாள், மூன்று டி20, நான்கு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது.
இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியும், டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணியும் கைப்பற்றின. அதன்பின் நான்கு போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
முன்னதாக முடிவடைந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் ஆஸ்திரேலிய அணியும் , மற்றொன்றில் இந்தியாவும் ஒரு போட்டி டிராவிலும் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் இத்தொடர் ஆரம்பித்ததிலிருந்தே இந்திய அணியைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக விலகியது, அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்து வருகிறது. குறிப்பாக டெஸ்ட் தொடரில் பலர் காயம் காரணமாக விலகியிருப்பது இந்திய அணியின் நிலையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
அப்படி தொடரின் போதும், தொடருக்கு முன்னதாகவும் காயமடைந்து விலகிய இந்திய அணி வீரர்களின் விவரம் குறித்து இங்கு பார்ப்போம்.
இஷாந்த் சர்மா:
இந்திய அணியின் நட்சத்திர டெஸ்ட் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா. இவர் கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது காயமடைந்தார். பின்னர் அவரது காயம் குணமடையாததன் காரணமாக ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
ரோஹித் சர்மா
அதிரடி பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா, ஐபிஎல் தொடரின் போது காயமடைந்து, பிறகு காயத்திலிருந்து மீண்டு வந்தார். இருப்பினும் அவரால் ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள், டி20 தொடரில் பங்கேற்க முடியவில்லை. தற்போது ஆஸ்திரேலிய அணிக்கெதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முகமது ஷமி
இந்திய அணியின் சிறப்பான வேகப்பந்து வீச்சாளர் என்ற பெயரைப் பெற்றவர் முகமது ஷமி. இவர், ஆஸ்திரேலியா அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் போது, பாட் கம்மின்ஸ் வீசிய பந்தில் காயமடைந்தார். இதன் காரணமாக முகமது ஷமி, மீதமிருந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் விலகினார். இந்நிலையில் ஷமியின் காயம் இதுவரை குணமடையாததால், அடுத்து வரும் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா என்பதும் சந்தேகமாகியுள்ளது.
உமேஷ் யாதவ்
இந்தியாவின் சீனியர் வேகப்பந்துவீச்சாளர் பட்டியலில் இருப்பவர் உமேஷ் யாதவ். இவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்தார். தற்போது அவர் காயத்திலிருந்து குணமடைந்து வந்தாலும், இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் இடம்பெறுவாரா என்பது கேள்விக்குறிதான்.
கே.எல்.ராகுல்
இந்திய அணியின் துணைக்கேப்டனாக செயல்பட்ட கே.எல்.ராகுல், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் பயிற்சியின் போது காயமடைந்தார். அவரது காயம் தீவிரமடைந்ததன் காரணமாக உடனடியாக இந்தியா விரைந்தார். தற்போது காயத்திலிருந்து மீண்டு வரும் கே.எல்.ராகுல், இங்கிலாந்து தொடரில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரவீந்திர ஜடேஜா
சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா காயமடைந்தார். தற்போது அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் ஜடேஜா, இங்கிலாந்து அணியுடனான முதல் இரண்டு டெஸ்ட்டில் பங்கேற்க மாட்டார் என்ற அறிவிப்பும் வெளிகியுள்ளது.
ரிஷப் பந்த்
இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த்தும், ஆஸ்திரேலியாவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸின் போது காயமடைந்தார். இருப்பினும் தனது காயத்தையும் பொருட்படுத்தாமல் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை தோல்வியிலிருந்து மீட்டார். மேலும் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பேட்ஸ்மேனாக மட்டும் செயல்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹனுமா விஹாரி
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஹீரோ என்றால் அது விஹாரியைத்தான் கூற வேண்டும். டிராவிட்டின் பிறந்தநாளன்று மற்றொரு டிராவிட்டை டெஸ்ட் கிரிக்கெட்டில் உயிர்பித்து காட்டினார் விஹார். இதற்கு காரணம் இரண்டாவது இன்னிங்ஸின் போது விஹாரிக்கு ஏற்பட்ட காயம். இதனால் அவரால் களத்தில் ஓடி ரன்களை சேர்க்க முடியவில்லை. இருப்பினும் இறுதிவரை களத்தில் நின்று இந்திய அணியை தோல்வியிலிருந்து மீட்டெடுத்தார். ஆனால் அவரும் காயம் காரணமாக நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளது இந்திய அணிக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ரவிச்சந்திரன் அஸ்வின்
இந்தியாவின் சீனியர் சுழற்பந்துவீச்சாளர் பட்டியலில் உள்ள அஸ்வின், இந்த தொடரில் மட்டும் 134 ஓவர்களை வீசியுள்ளார். இது ஆஸ்திரெலிய அணிக்கெதிராக இந்திய ஒருவர் வீசிய அதிக ஓவர் என்ற பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆனால் தற்போது அஸ்வினும் முதுகுவலியாலும், தூக்கமின்மையாலும் அவதிப்பட்டு வருவது அணிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மயாங்க் அகர்வால்
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சொதப்பியதால் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட மயாங்க் அகர்வால், நான்காவடு டெஸ்ட்டில் விஹாரிக்கு பதிலாக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பயிற்சியின் போது மயாங்க் அகர்வாலிற்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக, அவர் தற்போது ஸ்கேன் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவர் காயத்திலிருந்து குணமடையும் பட்சத்தில் ஹனுமா விஹாரியின் மாற்று வீரராக மயாங்க் இருப்பார் என்பது உறுதி.
ஜஸ்பிரித் பும்ரா
இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குபவர் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி முந்தபோது பும்ராவின் வயிற்றுப்பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணியுடனான நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகுவதாக பும்ரா இன்று அறிவித்தார். இதனால் நான்காவது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களை யார் வழிநடத்துவார் என்பது சந்தேகமாகியுள்ளது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன் தகுதிச்சுற்று: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அங்கிதா ரெய்னா!