ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தலைசிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேனாக திகழும் இந்திய வீரர் ரோஹித் ஷர்மா, டெஸ்ட் போட்டிகளிலும் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என பல்வேறு வீரர்கள் கருத்துத் தெரிவித்தனர். சமீப காலமாக, டெஸ்ட் போட்டிகளில் கே.எல்.ராகுல் ஓப்பனிங்கில் சொதப்புவதும் இதற்கு முக்கிய காரணம். அந்தவகையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்க அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இப்போட்டிக்கு முன்னதாக, வாரியத் தலைவர் அணியுடனான மூன்றுநாள் பயிற்சி போட்டியில் தென்னாப்பிரிக்கா மோதியது.
இதில், வாரியத் தலைவர் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியக்கப்பட்டார். இவரது டெஸ்ட் திறனை வெளிப்படுத்தும் வகையில் இந்த பயிற்சி போட்டி அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவர் டக் அவுட்டாகியுள்ளார்.
இப்போட்டியின் முதல்நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 279 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஏய்டன் மார்க்கரம் 100, டெம்பா பவுமா 87 ரன்கள் அடித்தனர்.
இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய வாரியத் தலைவர் அணியில் மயாங்க் அகர்வாலுடன் ரோஹித் ஷர்மா தொடக்க வீரராக களமிறங்கினார். இதில், தனது இரண்டாவது பந்திலேயே ரோஹித் ஷர்மா தென் ஆப்பிரிக்காவின் வெர்னான் ஃபிலாண்டரின் பந்துவீச்சில் நடையைக் கட்டினார். இதனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா அல்லது ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
மூன்றாம் நாள் இறுதியில், வாரியத் தலைவர் அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 265 ரன்களை எடுத்ததால் போட்டி டிராவில் முடிந்தது. வாரியத் தலைவர் அணியில், ஸ்ரீகர் பரத் 71, பிரியாங் பன்சல் 60 ரன்கள் எடுத்திருந்தனர்.