இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இவ்விரு அணிகளும் விளையாடும் முதல் பிங்க் டெஸ்ட் போட்டி இதுவாகும். இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் கோலி டெஸ்ட் போட்டியில் தனது 27ஆவது சதத்தை பூர்த்தி செய்து, 136 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இப்போட்டியின் மூலம் அவர் படைத்த சுவாரஸ்யமான சாதனைகளின் விவரங்கள் இதோ.
- பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர்
- டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 27 சதங்களை அடித்தவர்கள் பட்டியலில் சச்சினுடன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்துகொண்டார். இருவரும் இச்சாதனை படைக்க 141 டெஸ்ட் இன்னிங்ஸ்களை எடுத்துகொண்டனர். இப்பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் முதலிடத்தில் உள்ளார்.
- கோலி கேப்டனாக டெஸ்ட் போட்டியில் அடிக்கும் 20 ஆவது சதம் இதுவாகும். இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த கேப்டன்களின் வரிசையில் இரண்டாவது இடத்திலிருந்த பாண்டிங்கின் சாதனையை (19 சதம்) முறியடித்துள்ளார்.
- சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கோலி பதிவு செய்யும் 70ஆவது சதம் இதுவாகும். இதன் மூலம், சச்சின் (100 சதம்), ரிக்கி பாண்டிங் (71 சதம்) ஆகியோருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை அடித்த மூன்றாவது வீரர் ஆனார்.
- அதேபோல, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்த கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை (41) கோலி சமன் செய்துள்ளார்.
- டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 5000 ரன்களை கடந்த முதல் கேப்டன் என்ற பெருமையை தனது 86ஆவது டெஸ்ட் இன்னிங்ஸில் பெற்றார்.