ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. இந்நிலையில் கடந்த செப்.24ஆம் தேதி நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.
இப்போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது. மேலும் இப்போட்டியின் போது கே.எல்.ராகுல் அடித்த இரண்டு கேட்சுகளை கேப்டன் விராட் கோலி தவறவிட்டிருந்தார். இது தற்போது கிரிக்கெட் உலகின் பேசுபொருளாக மாறியுள்ளது.
காரணம், உலகின் தலைசிறந்த பீல்டர்களில் ஒருவராக இருப்பவர் விராட் கோலி. ஆனால் அன்றைய போட்டியில் அவர் கேட்ச் விட்டது மற்றும் பேட்டிங்கில் சொதப்பியது ஆகியவை தற்போது பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகை செய்துள்ளது.
இந்நிலையில் விராட் கோலியின் இளம் வயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் விராட் கோலி ஒன்று மெஷின் கிடையாது என காட்டமான பதிலை தெரிவித்து, விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ராஜ்குமார் சர்மா, ”இது போன்ற தவறுகள் நடப்பது விளையாட்டின் ஒரு பகுதி. ஏனெனில் கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் அன்றைய தினம் சரியாகவும் அமையும், மாறாக மோசமான நாளாகவும் அமையும். இது விளையாட்டின் ஒரு பகுதி மட்டுமே. மேலும் விராட் கோலி ஒன்றும் மெஷின் கிடையாது. அவரும் ஒரு மனிதர் என்பதை நீங்கள் மறந்துவிடுகிறீர்கள்.
ஏன் உலகின் தலைசிறந்த ஃபீல்டராக கருதப்படும் ஜான்டி ரோட்ஸ், ஒருமுறை கூட கேட்ச் விட்டது கிடையாதா? அவருடைய பழைய போட்டிகளை பார்த்தால் உங்களுக்கே அது புரியும். அன்றைய தினம் கோலிக்கு சாதகமாக அமையவில்லை. ஆனால் அவர் மீண்டும் இவ்விளையாட்டில் தனது திறமையை வெளிப்படுத்துவார் என்பதில் சந்தேகமில்லை” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:'கொல்கத்தா அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்களே காரணம்' - பாட் கம்மின்ஸ்!