இந்திய கிரிக்கெட் வீரரான கவுதம் காம்பீர், இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய பங்காற்றியவர். டெல்லியை சேர்ந்த இவர் இந்திய அணியின் சேவாக்குடன் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி பல குறிப்பிடும்படியான சாதனைகளை செய்துள்ளார்.
இந்திய அணியில் 2003 ஆம் ஆண்டு அறிமுகமான கவுதம் காம்பீர், இந்திய அணி 2007இல் டி20 உலகக் கோப்பையையும், 2011இல் ஒருநாள் உலகக் கோப்பையையும் கைப்பற்ற முக்கியப் பங்காற்றினார். 2013 ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணியில் சரியான இடம் கிடைக்காததால் கம்பீர் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் பங்கேற்று வந்தார். அதன்பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார்.
இதுதவிர, பல பொதுப்பிரச்சனைகளுக்கும் ஆதரவாக அவர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். சமீபத்தில் காம்பீர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லி தொகுதியில் பாஜக சார்பாக களமிறக்கப்படலாம் என்ற செய்தி வெளியாகியது.
அரசியல் குறித்து கவுதம் காம்பீர் கூறியதாவது,
இந்த சமுகத்திற்கு ஏதேனும் நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்பதையே நான் கருத்தில் கொண்டுள்ளேன். அந்த வேலையை எனது அறக்கட்டளை மூலமாக ஏற்கனவே செய்து கொண்டுதான் இருக்கிறேன். அதுதவிர எனக்கென குடும்பம் உள்ளது. முன்பு அவர்களுடன் நான் பெரிய அளவில் நேரத்தை செலவிட்டதில்லை என்பதால் வரும் காலங்களில் எனது நேரத்தை அவர்களுடன் செலவிடவே விரும்புகிறேன். நான் அரசியல் பற்றி எப்போதும் சிந்தித்தது இல்லை.
இந்திய அணி வரும் உலகக்கோப்பையில், பாகிஸ்தான் அணியுடன் மோதுவது பற்றி பிசிசிஐதான் முடிவு எடுக்க வேண்டும். பாகிஸ்தான் அணியுடன் மோதாமல் இருந்து 2 புள்ளிகளை இழப்பது ஒன்றும் தவறல்ல. கிரிக்கெட்டை காட்டிலும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள்தான் முக்கியம் என்பது தனது தனிப்பட்ட கருத்து, என்று தெரிவித்தார்.