தென்னாப்பிரிக்க அணிக்காக பல்வேறு போட்டிகளில் சிறப்பாக ஆடிய அம்லா, தன்னுடைய ஃபார்ம் காரணமாக சில மாதங்களுக்கு முன் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார். ஓய்வுக்குப் பிறகு அவர் என்ன செய்யப் போகிறார் எனத் தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், தற்போது இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் அணியான சர்ரே அணிக்காக கோல்பாக் முறையில் இரண்டு வருடம் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னதாக மிடில்செக்ஸ் (middlesex), ஹாம்ப்ஷயர் (hampshire) ஆகிய அணிகள் அம்லாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியாகவும், இறுதியாக சர்ரே அணி அவரை ஒப்பந்தம் செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சர்ரே அணிக்காக ஆடிவந்த இங்கிலாந்து வீரர்கள் ரோரி பர்ன்ஸ், சாம் கரன் ஆகியோர் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதால், அந்த அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில், அவர்களின் இடங்களைப் பூர்த்திச் செய்யும் விதமாக அம்லா இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஒப்பந்தம் குறித்து சர்ரே அணியின் அலுவலர் பேசுகையில், இந்த வார இறுதி அல்லது இந்த மாத இறுதியில் அம்லாவுடன் ஒப்பந்தம் உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னதாக மற்றொரு தென்னாப்பிரிக்க வீரரான மார்னே மோர்கெலுடன் சர்ரே அணி ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே:இனி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் நிம்மதியடைவார்கள்... ஓய்வெடுங்கள் ஸ்டெயின்..!