உலக அளவில் பத்து நாடுகளில் மட்டுமே பிரபலமான விளையாட்டாக கிரிக்கெட் போட்டி இருக்கிறது. இவ்வாறான கிரிக்கெட் போட்டிகளில் ஆடவர், மகளிர் என இரண்டு விதமான அணியினர் விளையாடினாலும் ஆடவர் அணிகள் பங்கேற்கும் போட்டிகளுக்கே அதிகபடியான வரவேற்பு இருந்தது.
ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் மகளிர் கிரிக்கெட் போட்டிகளும் வளர்ச்சிப்பெற்று பார்வையாளர்களை ஈர்த்துள்ளன. அந்தவகையில் அடுத்ததாக இம்மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 21ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடரின் இறுதிப் போட்டி மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று நடைபெறுகிறது.
இந்தத் தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. இதனிடையே ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரில் விளையாடிவருகிறது.
இதனிடையே இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், டி20 போட்டிகள் குறித்து கூறிய கருத்துகளை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் அவர், தற்போது இந்திய அணியினர் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். பெரிய ஸ்கோரை பதிவு செய்ய நினைக்கின்றனர். இது போன்ற மனநிலையால் மகளிர் கிரிக்கெட் போட்டிகளின் விளையாட்டுத்திறன் உயர்ந்துள்ளது. அடுத்து நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட்டில் மேலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்றார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்திய மகளிர் ஒருநாள் அணி சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில், டி20 அணி மோசமான தோல்விகளைத் தழுவியது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய டி20 அணி பலமான அணியாக உருவெடுத்துள்ளது. இதனால் இந்த உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். இந்திய அணியின் பலமே ஸ்பின் பவுலிங் தான். தேவைப்படும் சமயத்தில் அதை சரியாக பயன்படுத்தி ஸ்பின்னர்கள் விக்கெட் எடுப்பார்கள் என்றார்.
மேலும் பிற அணிகளுக்கு முன்பாக ஆஸ்திரேலியா சென்றுள்ளதால் அங்குள்ள சூழ்நிலைகளை முன்பே தெரிந்து கொண்டு உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாட அது தங்கள் அணிக்கு ஊக்கமாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.
ஹர்மன்பிரீத் கவுர், 104 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி இதுவரை இரண்டாயிரத்திற்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆஸ்கர் விருது வழங்கும் விழா: உலக சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்ப்பு!