இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர ஆல்ரவுண்டராக வலம்வருபவர் ஹர்திக் பாண்டியா. 26 வயதான இவர் இந்திய அணிக்காக 11 டெஸ்ட், 54 ஒருநாள், 40 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக ஆயிரத்து 799 ரன்களை எடுத்துள்ளார். பந்துவீச்சில் 109 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்றபோது ஹர்திக் பாண்டியாவுக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால், அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட பின் ராஞ்சி போட்டியில் பங்கேற்காமல் இருந்த அவரை தேர்வுக்குழுவினர் நேரடியாக நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய ஏ அணியில் தேர்வு செய்தனர்.
இந்தத் தொடரில் விளையாடுவதற்காக சுப்மன் கில் தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய ஏ அணிக் குழு நேற்று நியூசிலாந்துக்கு புறப்பட்டது. இந்நிலையில், உடற்தகுதித் தேர்வில் ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததால் அவர் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் இந்திய ஏ அணியில் இடம்பெற்றுள்ளார்.
சர்வதேச போட்டிகளில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு கடைபிடிக்கும் யோ-யோ உடற்தகுதித் தேர்வு போன்ற உடற்தகுதித் தேர்வுதான் இந்திய ஏ அணி வீரர்களுக்கும் பின்பற்றப்படுகிறது. இதைத்தொடர்ந்து, நியூசிலாந்து ஏ - இந்தியா ஏ அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 22ஆம் தேதி லிங்கன் நகரில் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டின் பிகாசோ! #RAHULDRAVID