இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ராவின் அதிகாரப்பூர்வ யூ-ட்யூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது, ஆகாஷ் சோப்ரா ஹர்பஜனிடம், ”உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான மூன்று தருணங்களைக் கூறுங்கள்” என்று கேட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த அவர், "2001இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர், 2007இல் டி20 உலகக்கோப்பை வெற்றி, 2011இல் 50 ஓவர் உலகக்கோப்பை வெற்றி. இவை மூன்றுமே மறக்க முடியாத தருணங்களாகும்.
குறிப்பாக, எனது குழந்தைப்பருவ கனவான உலகக்கோப்பையில் வெல்வதற்கு ஆஸ்திரேலியாவுடனான 2001இன் தொடர் முக்கியப் பங்குவகித்தது. நான் ஒரு முழு கிரிக்கெட் வீரராக அப்போதுதான் உணர்ந்தேன். அந்த வகையில், எனது நீண்ட நாள் ஆசையும் 2011இல் பூர்த்தியடைந்தது.
2007இல் டி20 உலகக்கோப்பையை வென்றது நம்பமுடியாத ஒன்று. நாங்கள் இந்தியாவிற்குத் திரும்பிவந்தபோது, எங்களுக்குப் பேராதரவு கிடைத்தது. இதற்கு முன்பு இதுபோன்ற மக்கள் ஆதரவை நான் பார்த்ததே இல்லை. இந்த மூன்று தருணங்களையும் என்னால் எப்போதும் மறக்க முடியாது " என்றார்.