சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தலைசிறந்த பந்துவீச்சாளராகத் திகழ்ந்து வருபவர் இந்திய வீரர் பும்ரா. தனது வித்தியாசமான பந்துவீச்சு முறையினால், முன்னணி பேட்ஸ்மேன்களை கதிகலங்கச் செய்யும் இவர், இந்திய அணிக்காக பல வெற்றிகளைத் தேடித் தந்துள்ளார். இந்த நிலையில், இவர் சக வீரர் யுவராஜ் சிங்குடன் இன்ஸ்டாகிராமில் நேற்று உரையாடினார்.
அப்போது யுவராஜ் சிங் பும்ராவிடம், ஃபினிஷிங்கில் யார் சிறந்தவர்கள் தோனியா அல்லது நானா (யுவராஜ் சிங்) எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பும்ரா, ’இது மிகவும் கடினமான கேள்வி. நீங்கள் இருவரும் பல போட்டிகளை ஃபினிஷ் செய்துள்ளதை நான் பார்த்துள்ளேன். அதனால், உங்கள் இருவரில் ஒருவரைத் தேர்வு செய்வது என்பது, அம்மா அல்லது அப்பா இவர்களில் யார் சிறந்தவர்கள் என்ற கேள்வியைக் கேட்பது போன்றது' எனப் பதிலளித்தார்.
இதையடுத்து, கோலி, சச்சின் டெண்டுல்கர் இவர்களில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கேள்விக்கு பும்ரா, நீண்ட நேரம் யோசித்தபிறகு சச்சின் எனக்கூறினார். அனைவரும் சச்சினின் ரசிகர்களாகத்தான் இருப்பார்கள். எனவே, நான் அவரை தேர்வுசெய்கிறேன் எனப் பதிலளித்தார்.
பின்னர் யுவராஜ் சிங், 'ஹர்பஜன் சிங் அல்லது அஸ்வின் இவர்களில் யார் சிறந்த ஆஃப் ஸ்பின்னர்' என்ற கேள்வியை பும்ராவிடம் முன்வைத்தார். இதற்கு பும்ரா, 'நான் அஸ்வினுடன் தற்போது இந்திய அணியில் விளையாடி வருகிறேன். ஆனால், நான் சிறு வயதிலிருந்தே ஹர்பஜன் சிங்கின் ஆட்டத்திறனைக் கண்டுகளித்துள்ளேன். மேலும் அவருடன் சேர்ந்தும் ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடியுள்ளேன். அதனால், நான் ஹர்பஜன் சிங்கை தேர்வுசெய்கிறேன்' எனப் பதிலளித்தார்.
33 வயதான அஸ்வின் இந்திய அணிக்காக 71 டெஸ்ட் போட்டிகளில் 365 விக்கெட்டுகளும், 111 ஒரு நாள் போட்டிகளில் 150 விக்கெட்டுகளும், 46 டி20 போட்டிகளில் 52 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். மறுமுனையில், ஹர்பஜன் சிங் 103 டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் ஹர்பஜன் 236 ஒருநாள், 28 டி20 போட்டிகளிலும் விளையாடி முறையே 269 விக்கெட்டுகளையும், 25 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
இதனிடையே, இந்த உரையாடலின்போது தான் ஐபிஎல் ஆட்டத்தின் மூலமாகத் தான் இந்திய அணிக்குள் நுழைந்தேன் என்பது கட்டுக்கதை எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்...! நினைவுகூறும் யுவராஜ் சிங்!