கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் விளையாடுவது மட்டுமின்றி அவ்வப்போது சமூகவலைதளங்களிலும் வார்த்தைகளால் விளையாடுகின்றனர். அது மட்டுமல்லாது சக வீரரின் பதிவுகளுக்கு கேலியான பதில்களை பதிவிட்டும் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகவும் மாறுகின்றனர்.
அந்த வகையில் ஃபீல்டிங் ஜாம்பவானான தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படம் ஒன்றை பதிவிட்டார். அந்தப் படத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் உடையில் இருந்த அவர் மீண்டும் அந்த உடையில் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதைப் பார்த்த நமது இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், நீங்கள் ராஞ்சியில் நடக்கயிருக்கும் இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் விளையாட முடியுமா. ஏனெனில் தென் ஆப்பிரிக்க அணிக்கு பேட்டிங் தேவைப்படுகிறது என பதிவிட்டார். இதைக் கண்ட ஜான்டி ரோட்ஸும், தற்போதைய சூழலில் தென் ஆப்பிரிக்க அணிக்கு என்னை விட சிறந்த பேட்ஸ்மேன் தேவை என்று பதிவிட்டார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி இரண்டுப் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணியை எளிதாக வீழ்த்தியதோடு தொடரையும் 2-0 கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் ராஞ்சியில் நடைபெறுகிறது.
தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் இரண்டுப் போட்டியிலும் திணறியதே அந்த அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. எனவே அதனைக் குறிப்பிடும்வகையில் ஹர்பஜன், ஜான்டி ரோட்ஸிற்கு நக்கல் அழைப்பு விடுத்துள்ளார்.