ஹைடன் என்ற பெயர் தமிழகத்தில் கிரிக்கெட் தெரிந்தவர்கள் மத்தியில் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. காரணம் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி, டிஎன்பிஎல் தொடரில் வர்ணனையாளராக செயல்பட்டு, பின்பு திருநெல்வேலி இருட்டு கடை அல்வா சமைத்தது என பல்வேறு வகையில் தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் புகழ் பெற்ற நபர் ஆஸ்திரேலியாவின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் மேத்யூ ஹைடன்.
ஹைடனின் கிரிக்கெட் தொடக்கம்;
90 களின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் அணியான குவின்ஸ்லேண்ட் அணிக்காக ஹைடன் தனது முதல்தர கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கினார். அன்று தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கிய அவர் பின்னாட்களில் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார் என்று யாரும் எதிர்பாத்திருக்க மாட்டார்கள்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹைடன்:
தனது முதல் தர கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட ஹைடன் 1993ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார். ஆனால் அந்த தொடரில் அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அதன் பிறகு 1994 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஹைடன் முதல் இன்னிங்ஸில் 15 ரன்களுடனும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 ரன்களுடனும் வெளியேறினார். அதன் பின் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட ஹைடன் அங்கு தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். ஆனால் அத்தொடரில் நான்கு முறை டக் அவுட் ஆனதால் மீண்டும் ஆஸ்திரேலிய அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அதன் பின் 2001ஆம் ஆண்டு இந்திய அணியுடனான டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட ஹைடன் அங்கு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்ற உறுதுணையாகவும் இருந்தார். அந்த தொடரில் அவர் மூன்று டெஸ்ட் போட்டிகளில் 549 ரன்களை குவித்து 109.80 புள்ளிகளை சராசரியாக கொண்டிருந்தார்.
அன்றிலிருந்து ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி கொண்டார். அதன் பின் 2003ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தால் 437 பந்துகளில் 380 ரன்களை விளாசி பேட்டிங்கில் தனது அதிரடியை வெளிப்படுத்தினார்.
அதனைத்தொடர்ந்து 2007/08 ஆம் ஆண்டுகளில் இந்திய அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளில் சதமடித்து அசத்தினார். இதன் மூலம் உலக டெஸ்ட் அணியின் தொடக்க வீரராகவும் தேர்வுசெய்யப்பட்டார்.
ஒருநாள் போட்டிகளில் ஹைடன்:
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 1993ஆம் ஆண்டு தனது முதல் ஒருநாள் போட்டியைத் தொடங்கினார். ஆனால் அதில் அவர் சரியாக விளையாடாததால் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
ஏழு ஆண்டுகளுக்கு பிறகு 2000ஆம் ஆண்டு மீண்டும் ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் இடம்பிடித்தார். அதன் பின் அவரின் அதிரடியான ஆட்டத்தை கண்டு அனைத்து அணி பந்துவீச்சாளர்களும் அச்சமடைந்தனர்.
தொடர்ந்து 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த ஹைடன் அத்தொடரில் நமிபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் அரைசதமடித்தார். இந்த மோசமான ஆட்டத்தினால் மீண்டும் அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார். அதன்பின் 2007 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மீண்டும் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அந்த போட்டியில் அவர் ருத்ரதாண்டவமாடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 181 ரன்களை விளாசினார். இது ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய வீராரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாகவும் அப்போது பதிவானது.
அதன் பின் 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கான சூப்பர் எட்டு சுற்று ஆட்டத்தில் மூன்று சதங்களை விளாசி தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார். அதில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 66 பந்துகளில் சதமடித்து உலகக்கோப்பை தொடரில் குறைந்த பந்துகளில் சதமடித்தவர் என்ற சாதனையையும் படைத்தார்.
இவரின் அபார பேட்டிங் திறமையினால் ஆஸ்திரேலியா அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறை உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. அந்த தொடரில் ஹைடன் 73.22 சராசரியுடன் 659 ரன்களை விளாசி தொடர் நாயகன் விருதையும் தட்டிச்சென்றார். தொடர்ந்து ஐசிசியின் உலக ஒருநாள் அணிக்கான தொடக்க வீரராகவும் தேர்வானார்.
டி20 போட்டிகளில் ஹைடன்:
2005 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக தேர்வு செய்யப்பட்ட ஹைடன் முதல் போட்டியில் 6 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.
அதன்பின் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹைடன் ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்குத் தகுதிபெற முக்கிய காரணமாக இருந்தார். அந்த தொடரில் அவர் நான்கு அரைசதங்களை அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதுமட்டுமில்லாமல் அந்த தொடரில் அவர் 262 ரன்களை சேர்த்து தொடரின் அதிக ரன் அடித்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.
ஐபிஎல் தொடரில் ஹைடன்:
2008ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதன் பின் தனது தொடர்ச்சியான அதிரடி பேட்டிங்கால் சென்னை அணியில் நீங்கா இடம்பிடித்தார்.
அதற்கடுத்த ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சீசன் ஐபிஎல் தொடரில் 572 ரன்களை விளாசி ஐபிஎல் தொடரில் அதிக ரன் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி அசத்தினார்.
அதன் பின் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது சீசன் ஐபில் தொடரில் ஒரு பிரத்யேக பேட்டை உருவாக்கி அதற்கு ’மங்கூஸ்’ எனவும் பெயரிட்டார். அந்த தொடரில் அவரது பேட் குறித்து பல்வேறு சர்ச்சைகளையும் தூண்டுவதற்கும் வழிவகை செய்தார்.
இருப்பினும் அந்த பேட்டுடன் டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கிய ஹய்டன் 43 பந்துகளில் 93 ரன்களை விளாசி அனைவரின் வாயையும் அடைத்தார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் தனது முதல் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு:
2009 ஆம் ஆண்டு தனது ஃபார்ம் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அப்போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் ஜஸ்டின் லங்கர் ஆகியோர் ஆஸ்திரேலிய அணி ஒரு சிறப்பான தொடக்க வீரரை இழந்துள்ளது என குறிப்பிட்டிருந்தனர்.
அதன் பின் தனது உள்ளூர் அணியான குவின்ஸ்லேண்டு அணியின் சுற்றுலாத்துறை தலைவராக செயல் பட்டுவந்தார். கடந்த 2011 ஆண்டிற்கு பிறகு பிரபல விளையாட்டு தொலைகாட்சியின் வர்ணனையாளராக தற்போது வரை செயல்பட்டு வருகின்றார்.
ஹைடனின் ரன் விபரம்;
- ஹைடன் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு முச்சதம், இரண்டு இரட்டை சதங்கள், 30 சதங்கள் என மொத்தம் 8625 ரன்களை எடுத்துள்ளார்.
- 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 10 சதங்கள், 36 அரசதங்களுடன் 6133 ரன்களை எடுத்து அசத்தியுள்ளார்.
- ஒன்பது சர்வதேச டி20 போட்டிகளில் மட்டும் விளையாடிய ஹைடன் 4 அரைசதங்களுடன் 308 ரன்களை எடுத்துள்ளார்.
- ஐபிஎல் போட்டிகளை பொறுத்த வரையில் 32 போட்டிகளில் பங்கேற்ற அவர் 8 அரசதங்களுடன் 1107 ரன்களை எடுத்துள்ளார்.
டிஎன்பிஎல்லில் ஹைடன்:
ஐபிஎல்லைத் தொடர்ந்து தமிழகத்தில் தொடங்கப்பட்ட டிஎன்பிஎல் தொடரின் வர்ணனையாளராக செயல்பட்டுவந்த ஹைடன், தமிழக மக்கள் மனதில் நீங்கா இடத்தையும் பிடித்து அசத்தினார்.
அவர் டிஎன்பிஎல் தொடரின் போது தமிழகத்தின் மிகப்பிரபலமான திருநெல்வேலி அல்வாவை அங்கேயே சென்று தயாரித்தார், தமிழக உணவுவைகைகளை செய்வது போன்ற விளையாட்டான செயல்களினால் மிகவும் பிரபலமடைந்தார்.
அதுமட்டுமில்லாமல் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையணிந்து, பிரபல நடிகர்களின் வசனங்களை தமிழில் பேசியும் ஆச்சரியப்படுத்தினார் ஹைடன்.
பதினைந்து ஆண்டுகளாக கிரிக்கெட்டில் தனது தடத்தை பதித்த ஆஸ்திரேலியாவின் ஹைடன், தற்போது வர்ணனையிலும் கலக்கி வருகிறார். இன்று தனது 48ஆவது பிறந்த நாளை தனது குடும்பத்தினருடன் கொண்டாடி வரும் ஹைடனுக்கு....#HBDHaydos