2019ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இதில் பாஜக சார்பாக டெல்லி மாநில கிழக்குத் தொகுதி வேட்பாளராக சமீபத்தில் அமித் ஷா முன்பு பாஜகவில் இணைந்த இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்.
இதற்கான வேட்புமனு தாக்கலின்போது கம்பீரின் சொத்து மதிப்பை அலுவலர்களிடம் தெரிவித்தார். அதில் கம்பீர் மற்றும் அவரது மனைவி இருவருடைய சொத்து மதிப்பாக ரூ.145.5 கோடி எனக் கணக்கிடப்பட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் 2017-18ஆம் ஆண்டுக்கான வருமானமாக 12.4 கோடி ரூபாயாக தெரிவித்துள்ளார்.
டெல்லி மாநில மக்களவைத் தொகுதி வேட்பாளர்களில் பணக்கார வேட்பாளர் கம்பீர்தான். மேலும் கம்பீரை எதிர்த்து காங்கிரஸ் சார்பாக அர்விந்தர் சிங்கும், ஆம் ஆத்மி கட்சி சார்பாக அதிஷியும் போட்டியிடுகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கம்பீர் பேசுகையில், கடந்த ஐந்து வருடங்களில் பிரதமர் மோடி செய்ததைத் தொடர்ந்து செய்ய வேண்டும். நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் தேர்தலில் போட்டியிடுகிறேன் எனத் தெரிவித்தார்.
டெல்லி மாநில மக்களவைத் தேர்தல் மே 12ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.