கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர், காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தங்களது நேரத்தை குடும்பத்தினருடன் செலவிட்டு வருகின்றனர். அதிலும் ஒரு சில சமூக வலைதளபக்கங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளித்தும், இன்ஸ்டாகிராம் நேரலை நேர்காணலில் பங்கேற்றும் வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனாத்கட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் நேரலைக்கு அளித்த நேர் காணலில், தனக்கு ஸ்டோக்ஸ் சூட்டிய பெயர் பற்றியும், ரஞ்சி கோப்பையை வென்றது குறித்தும் நிகழ்வுகளைப் பகிர்ந்துள்ளார்.
உனாத்கட் கூறுகையில், ‘கடந்த ஐபிஎல் தொடரின் போது, நான் ஸ்டோக்ஸுக்கு மாங்கனிகளைப் பரிசளித்தேன். உடனே அவர் என்னை அணியின் 'மேங்கோ மேன்' எனப் பெயர் சூட்டினார். தற்போதும் அவர் என்னை அவ்வாறே அழைக்கிறார். ஒரு போட்டியில் அவுட் ஆன பிறகு, பேட் மற்றும் ஹெல்மெட்டை சரமாரியாகப் போட்டு உடைத்தார். இருந்தாலும் அவர் ஒரு நல்ல நண்பர்' எனத் தெரிவித்தார்.
ரஞ்சி கோப்பையை வென்றது குறித்த அனுபவத்தை பகிர்ந்த உனாத்கட், ‘சவுராஷ்டிர அணிக்கு கேப்டனாக செயல்பட்டு, முதன் முறையாக கோப்பையை வென்று கொடுத்தது, என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு தருணமாகும். ஏனெனில், நாங்கள் ஒவ்வொரு போட்டியின் போதும் எங்களது முழுத்திறனையும் பயன்படுத்தினோம். அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் தான் நாங்கள் வெற்றியை ஈட்டினோம். அதனை என்னால் எப்போது மறக்க இயலாது’ என்றார்.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்தில் ஜெயதேவ் உனத்கட்டை ரூ.3 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தக்கவைத்துக் கொண்டது. மேலும் 2019-20 ஆண்டிற்கான ரஞ்சி கோப்பைத் தொடரின் பத்து போட்டிகளில் பங்கேற்ற உனாத்கட் 67 விக்கெட்டுகளை வீழ்த்தி, ரஞ்சி கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நபர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
இதையும் படிங்க:கரோனா அச்சுறுத்தல்: லேவர் கோப்பை ஒத்திவைப்பு!